தருமபுரி; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு்ள்ளது.
கலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், அக்குடும்பத்தில் 8வது கோள் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்தை போன்று, ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு சுற்றி வரும் பல கோள்கள் அடங்கிய மண்டலம் உள்ளது. ஏராளமான கோள்களை கொண்ட இந்த மண்டலத்தில் எதுவும் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இல்லை. இருப்பினும் இவற்றில் 8 கோள்கள் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளன. இந்த கோள்களின் மையமாக விளங்கும் நட்சத்திரம் கெப்ளர் 90 என அழைக்கப்படுகிறது. இது 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கெப்ளர் 90 நட்சத்திர மண்டலம், மினி சூரிய குடும்பம் போன்றே காணப்படுகிறது. கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக காணப்படும் இந்த நட்சத்திர மண்டலத்தில் சிறிய அளவிலான கோள்கள் உள் பகுதியிலும், பெரிய கோள்கள் வெளி பகுதியிலும், நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 90ஐ என்ற கோள், பூமியை போன்றே இருந்தாலும், இது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 14.4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் பரப்பளவு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். தோராயமாக 426 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம். செவ்வாய் கிரகத்தை விட இது வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
சில்வர்ஸ்டோன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையா பேட்டியளித்துள்ளார்.அப்போது பேசிய அவர் தமது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறினார். ஆனால் எனது வீடு என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியாது என்றார். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது கேட்டாலும் தர தயாராக உள்ளதாக கூறினார். மேலும் பேசிய மல்லையா, தாம் எப்போதும் இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்கயில் கடன் வாங்கி நான் நாட்டை விட்டு ஓடியதாக எப்படிக் கூறமுடியும் என வினவி இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என சாடியுள்ளார். இந்தியாவில் தற்போது தேர்தல் சீசன் களைகட்டியுள்ளதால் என்னை இந்தியா கொண்டு சென்று சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். அதற்காக தான் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன் போல என்றார்.
சென்னை: டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி, ஆனால் இதில் டெண்டர் முறைகேடு, உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார் உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்று தெரிவித்தார்.இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மசோதாவில் திருத்தமுள்ளதால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக வெளிநடப்பு செய்த நிலையில் சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.காங்கிரஸ் தலைவர் ராமசாமி போட்டி:வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராமசாமி, லோக் ஆயுக்தா மசோதா வெளிப்படையாக இல்லை என்றும் மசோதாவை ஏற்றுகொண்டாலும் குறைகளை களைய வேண்டும் என்று தெரிவித்தார்.
Back To Top