Articles by "DMKITWing"
Showing posts with label DMKITWing. Show all posts
வைர விழா நாயகன் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக அரசியலிலும் பெரும் தொண்டாற்றிய மூத்த தலைவர். இவரது எழுத்து எவ்வளவு வலிமையானது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிவர். அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்விலும் கடைபிடிக்கும் வகையில் கலைஞர் அவர்கள் உரைத்த முத்தான 25 பொன்மொழிகள்... 





1 "தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை." 




2 "உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்." 




3 "தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது." 





4 "குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்." 





5 "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது"





6 "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்." 





7 "வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?" 





8 "மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்." 



9 "உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்." 




10 "இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!" 



11 "பதவி என்பது முள்கிரீடம் போன்றது!" 



12 "அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை." 



13 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம். 



14 "அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?" 




15 "ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் கணக்கிடத் தெரிந்துகொள்ளலாம்." 



16 "தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை." 



17 "ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது." 




18 "அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது." 




19 "அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தொன்றிவிடுவான்." 



20 "தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்." 




21 "தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய் சேரும் போது தான் தோன்றுகிறது." 






22 "பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்கு தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்." 



23 "சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்." 




24 "கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு." 




25 "துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..."


மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது

2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது
3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது

4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம்
6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது
7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது
8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது
9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீடுகள் கட்டும் பணியை நிறைவேற்றியது.
10) சுனாமியால் பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கத் திட்டம் அறிவித்ததும் திமுக ஆட்சியில்தான்.
11)மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தொலைத்தொடர்பு கோபுரப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல், வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்து, ஊழல் செய்துள்ளது. இதன் காரணமாகத்தான் மீனவர்களுக்கான வாக்கி டாக்கி பயன்பாடு இதுவரை முழுமை பெறாமல் உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில், பல அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அதே நிலை தான் தற்போதைய அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.
தேர்தல் வாக்குறுதியிலும், சட்டப் பேரவையிலும் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் அளித்ததும், சொன்னதைச் செய்ததுடன், சொல்லாததையும் செய்தது திமுக அரசு மட்டும்தான்.
- திரு. M.K. Stalin திமுக செயல்தலைவர்



ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?

1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஆதாரம்

ஜெயலலிதாவின் Cash for Vote
Story 👇

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது

2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது

இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.
Thanks to Mr. Antony Parimalam

1)1972-77 வரை இந்திராவுடன் நெருக்கமாக இருந்த MGR காவேரி பிரட்சினையை தீர்க்க எடுத்த முயற்சிகள் என்ன?


2)இந்திரா முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் 1977 ல் ஆட்சிக்கு வந்த MGR காவேரி வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் போடலாம் என்ற உரிமை இருந்தும் ஏன் வழக்கு போடவில்லை?


3)1977 முதல் 1987 வரை MGR ஏன் நடுவர் மன்றம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?


1983 ல் மன்னார்குடி ரெங்கநாதன் போட்ட வழக்கில் கூட 1986 வரை MGR அரசு தன்னை இணைந்துக் கொள்ளாதது ஏன்?


4)பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998 இல் தானே தி.மு.கழக ஆட்சியில், இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.


காவேரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை பெற அப்போது 1991-96 வரை காங்கிரசுடன் நெருக்கமா இருந்த ஜெயலலிதா ஏன் முயற்சிக்கவில்லை?
1991-1996 மற்றும் 2001-06 ஆட்சியிலிருந்த ஜெயலலிதா காவேரி பிரட்சினையை தீர்க்க செய்த முயற்சிகள்தான் என்ன?


5) 2007 நடுவர் தீர்ப்பு வந்தவுடன் கர்நாடகா CIVIL APPEAL NO. 2453 OF 2007 வழக்கை தமிழக அரசு மீது போட்டது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கர்நாடக அரசு மீது CIVIL APPEAL NO. 2456 OF 2007 போட்டது கேரள அரசு CIVIL APPEAL NO. 2454 of 2007 மூலம் தமிழக அரசு மீது வழக்கு போட்டது.
இந்த வழக்கெல்லாம் முடிவுக்கு வராத நிலையில் கலைஞரால் எப்படி காவேரி பிரட்சினையை தீர்த்திருக்க முடியும்?


6)காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் வெளிவர அடிப்படையே
கலைஞர் போட்ட Civil Appeal No. 2456 of 2007 தான் காரணம்.
மேலும் ஜெயலலிதாவா காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட நீதிமன்றத்தை கோரினார்? 

நீதிபதிதானே தமிழக அரசிடம்

நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட மனுதாக்கல் செய்ய சொன்னார்.
பிறகு எந்த அடிப்படையில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட ஜெயலலிதா காரணம் என்கிறீர்கள்?

7) 2011 முதல் 2018 வரை அதிமுகதானே ஆட்சியில் இருந்துள்ளது. அப்படியிருந்தும் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி யிலிருந்து 177.25 டி.எம்.சி யாக குறைக்கப்பட்டதற்கு அதிமுக சரியாக வாதாடவில்லை என்பதுதானே காரணம். இதை மறுக்க முடியுமா?


8) கடந்த 27 ஆண்டுகளில் வழங்கப்படாத இறுதி தீர்ப்பு 2018ல் தானே வழங்கப்பட்டுள்ளது.


இதற்கு முன் வழங்கப்பட்ட எந்த தீர்ப்பும் இறுதி தீர்ப்பு கிடையாதே. பிறகு எந்த அடிப்படையில் கலைஞரை குறையடிக்கிறீர்கள்?


காவேரிக்காக எதுவுமே செய்யாத அதிமுக இறுதி தீர்ப்பை அமல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மற்றவர்களை குறை கூறியும் விமர்சித்தும் பொழுது போக்குவது ஏன்?


Though the award was passed on 5th February, 2007, yet it was published by requisite notification dated 19th February, 2013. On 10.05.2013, in I.A. No. 5/2013 in Civil Appeal No. 2456 of 2007, a two-Judge Bench, taking note of the notification dated 19th February, 2013 and also considering CIVIL APPEAL NO. 2453 OF 2007 The State of Karnataka by its Chief Secretary … Appellant(s) Versus State of Tamil Nadu by its Chief Secretary & Ors. … Respondent(s) WITH CIVIL APPEAL NO. 2454 of 2007 State of Kerala through the Chief Secretary …Appellant(s) to Government Versus State of Tamil Nadu through the Chief Secretary …Respondent(s) to Government and others CIVIL APPEAL NO. 2456 OF 2007 
State of Tamil Nadu through the Secretary …Appellant(s) Public Works Department Versus State of Karnataka by its Chief Secretary …Respondent(s)Government of Karnataka.

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது?
இதோ அவரே விளக்கம் தருகிறார் மூடர்களே!!


தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் – ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் – என்னைப் பற்றி குறிப்பிடும் போது – நான் ஏதோ “சல்லிக்காசு” கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் – இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் – என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் – என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் – அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் – உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
முரசொலி தொடங்கி முதல் கார் வரை…
எனக்கு 18 வயதாகும் போது “முரசொலி” வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.
அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய “மந்திரி குமாரி” நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய “மணமகள்” திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.
அதுபோலவே “இருவர் உள்ளம்” திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.
நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.
அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது – “வாக்சால்” -4983.
75 படங்கள்…
இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், “ரைசிங் சன்” ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.
வசதியற்ற வீடு…
1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் – தம்பி துரைமுருகன் போன்றவர்கள் – அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே “ஸ்ட்ரீட் வீடு” என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.
இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் – என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது – அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.
நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ரூ.100 கோடி…
முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், “சன்” தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை” ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.
வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் – பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை” என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
செம்மொழி மாநாடு…
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் “கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை” தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
2004-2005-ம் ஆண்டில் “மண்ணின் மைந்தன்” படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் – “கண்ணம்மா” படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை “சுனாமி நிவாரண நிதி”யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.
உளியின் ஓசை…
2008-ம் ஆண்டு, “உளியின் ஓசை” திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.
2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட “பெண் சிங்கம்” திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து – 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் “இளைஞன்” திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை – தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.
23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் “அம்பேத்கார் சுடர்” எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.
25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக – “தென்பாண்டிச் சிங்கம்” என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக “ராஜராஜன் விருது”ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா…
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.
நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.
சொத்துகளே வாங்கவில்லை…
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சன்’ தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை”க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் – எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் – சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.
நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது – நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.
தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் – நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்தவரை, என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு “நெருப்பு” மாதிரி! நான் முதன் முறையாக முதல்வராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, “மஸ்டர் ரோல்” ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.
சிபாரிசுக்கு இணங்கவில்லை…
இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.
நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.
நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி – என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!
 - கலைஞர் கருணாநிதி
பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-








1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு

2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.

4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு

6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.

7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.

9.இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.

10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.

11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.



1.ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

2.என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது பாருங்கோ என்று குழைவுடன் கூறும் குணாளர்களைக் கேட்கிறேன். கலை, மக்கள் நிலையை மாசுபடுத்தும்போது அந்தக் கலையைத் தொலைக்காமல் வேறென்ன செய்வது?

3.முருகன் என்றால் அழகுதான்; வேறல்ல என்கிறார்கள் சில முருகதாசர்கள். அப்படியானால் அன்றலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், வெண்ணிலா, வானவில் ஆகிய அழகுப் பொருள்கள் இருக்க முருகன் என்றோர் தனிக் கற்பனை எதற்கு?

4.மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும். விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்கவேண்டும். ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது. தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?

5.பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்லநிலை.

6.அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

7.குழந்தைப் பருவத்தில் மனித சமுதாயம் இருந்தபோதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் என்று கடவுட் கதைகள் தேவைப்பட்டன. அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றுள்ள இந்தக் காலத்தில் இவை எதற்கு?

8.உயர்வகுப்பென்று உறுமிக்கொண்டு பிறரை அடக்கியாள்வதும் ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்களை இழிவு செய்வதும்தான் புனித இந்து மார்க்கத்தின் பெரிய பெரிய நீதிகள். நாடு வாழவேண்டுமானால் இத்தகு நீதிகளைத் தரும் மார்க்கம் மறைய வேண்டும்.

9.புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

10.சர்வேஸ்வரனின் பொருள் களவு போனால் கூட சாதாரண போலீஸ்தான் கண்டுபிடிக்கிறதேயொழிய கடவுள் சக்தி அதற்கும் பயன்படுவதில்லையே - ஏன்? இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள் இருப்பதால் நாட்டுக்கு என்ன பயன்?

11.காதல் உற்றவனின் உறுப்புக்களைச் சிதைப்பது, தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவது, தம்பியின் துரோகத்தைத் துணைகொண்டு அண்ணன் தலையைக் கீழே உருட்டுவது - இதன் பெயர்தான் இராமாயணம். இந்த இராமாயணம் நமக்குத் தேவையா?

12.நாலுவேதம், ஆறுசாஸ்திரம், அறுபத்து நான்கு கலைஞானம் இருக்க, பராசர் யாக்ஞவல்கியர் உபதேசங்கள் இருக்க, உன்னதமான உபநிஷத்தும் உத்தமமான கீதையுமிருக்க, ஒரு வாசகத்துக்கும் உருகாதாரையும் உருகவைக்கும் திருவாசகம் இருக்க, முருகன் அருளைத் தரும் திருப்புகழ் இருக்க, எல்லாம் இருந்தும் இந்த நாட்டிலே இல்லாமையும் போதாமையும் கூடவே இருக்கின்றனவே - அது ஏன்? இல்லாமையைப் போக்க இந்த ஏடுகளால் முடியவில்லை என்றால் ஏன் இருக்க வேண்டும் இவை இன்னமும் இந்த நாட்டிலே?

13.இங்குள்ள ஜாதித் திமிரைக் கண்டிக்க முன் வராத வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறத் திமிரைக் கண்டிப்பது மகத்தான குடியன் மதுவிலக்கு பிரசாரம் புரிவது போன்ற செயல் தவிர வேறென்ன?

14.ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.

15.பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள் பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?

16.நடுப்பகல் - சுடுமணல் - பெருநடை - சுகமான பயணம் - இந்நான்கு தலைப்புகளையும் ஒரே செய்திக்குப் பயன்படுத்தும் தோழரை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அண்டப் புளுகர் என்பீர்கள்! அத்தகைய புளுகர்களால் எழுதப்பட்ட அர்த்தமற்ற ஏடுகள்தான் புராணங்கள்.

17.விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த மோட்டாரில் ஏறிக்கொண்டு அஞ்ஞானத்தை வளர்க்கும் பஜனை மடத்திற்குச் செல்லும் நம் போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையில் எவ்வளவு பேர் கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்!

18.ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

19.சித்திரை, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசிக்குத் திருப்பதி என்று ஒவ்வொரு மாதத்தையும் நாம் புண்ணிய காரியத்துக்கே செலவிட்டால் வேறு உருப்படியான காரியத்தை எப்போது தான் புரிவது?

20.ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே காளியை, அதில் ஒருகண்ணால் பார்க்கக்கூடாதா ஏழைகளை! ஏழைகள் படும் அவதியை! அவளை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொல்கிறார்களே பூஜித்துப் பூஜித்து ஏழைகள் கண்ட பலனென்ன?

21.சினிமாப் படத்தில் யாரோ ஒரு மாது ஆபாசமாகக் காட்சியளித்தால் ஆக்ரோஷத்துடன் அதைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பன் கலையிலே நெளிந்து கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்கமட்டும் தயங்குகிறோம். ஏன்?

22.முதலாளி - நிலப்பிரபு - புரோகிதன் இந்த மூவகைச் சுரண்டல் சக்திகளிலே ஒன்றைவிட்டு மற்றதை மட்டும் முறிப்போம் என்றால் முடியாது. ஏனெனில் சுயநலம், சுயசுகம் என்ற பசைபோட்டு இந்த மூன்று வளைவுகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

23.ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

24.எங்கோ ஒரு குக்கிராமத்தில் குறி கூறுவான் ஒரு தந்திரக்காரன். அங்கே கும்பல் கூடும். அதற்கு அருகே அரியதோர் இயற்கை காட்சி இருக்கும். ஆனால் அதைக் காணவோ யாரும் வரார். இப்படிப்பட்ட நாட்டிலே இலக்கியம் வளரவில்லை என்றால் எப்படி வளரும்?

25.பாசியை நீக்கிவிட்டுக் குளத்தின் படிக்கட்டுகளை இடித்த கதைபோல, கனியைக் கொடுத்துவிட்டு, கடுவனையும் நிறுத்தியதுபோல. காலிலே தண்டையைப் பூட்டிவிட்டுக் கழுத்துப் புண்ணுக்கு மருந்திட மறுப்பது போல, பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தது. ஆனால் தீண்டாமையைத் தடுக்கவில்லை. துடுக்கர் கூட்டத்தை ஒடுக்கிற்று. ஆனால் மதத்தரசர் கூட்டத்தைக் கொழுக்கவைத்தது. நகர், ஊர் பலவற்றை எழுப்பிற்று. ஆனால் சேரிகளைத் தகர்க்காது விட்டது. ஆம் ஏகாதிபத்தியத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது.

26.ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

27.விஞ்ஞானக் கண்டுபிடிப்பான மோட்டாரில் ஏறிக்கொண்டு வைதிகத் திருப்பதி மலைக்கு மொட்டையடிக்கச் செல்வது, முதல்தரமான முட்டாள்தனமல்ல. விஞ்ஞான அறிவுக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமும் ஆகும்.

28.அவதார புருஷனாகிய இராமனால் கண்டுபிடிக்கமுடியாத ரயிலை ஒரு சாதாரண மனிதனாகிய ஜேம்ஸ்வாட் தான் கண்டு பிடிக்க முடிகிறது. என்ன பொருள் இதற்கு? அவதார புருஷனாக இருப்பதைவிட சாதாரண மனிதனாக இருப்பது மேல் என்பது தானே?

29.அவர் சங்கரர்; இவர் ஜீயர்; இது தம்பிரான்; அது சாமியார் என்று யார் யாரையோ பூஜித்து அலுத்தீர்- பழைய வழியிலே நடந்ததால். இனி உழைப்பாளி விஞ்ஞானி. பொதுநல ஊழியன் என்பவரை ஆதரிக்கும் புதிய வழியில் நடவுங்கள்; உலகு சீர்திருந்தும்.

30.இந்தியாவில் அறிவு சூன்யமே. ஞானம் இருப்பதை இல்லை என்று கூறுவதே வேதாந்தம். இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கம். பொய்யும் புரட்டுமே சாஸ்திரம்.

31.தீண்டாமையைக் கையாள்வது நியாயமல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால் ..... என்று பலர் இழுத்தாற்போல் பேசுகின்றனர்.ஆனால் என்று அநேக காலமாகக் கூறியாகிவிட்டது. இனி நாம் ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது என்று கூறியாக வேண்டும்.

32.அபின் விற்று வாழ்பவன். போதை கூடாது என்று சொற்பொழிவு ஆற்றுவானா? புராணப் பொய்யையே நம்பி வாழும் ஆரியர். மூடநம்பிக்கைக் கூடாது என்று போர்ப்பரணி பாடுவாரா? பாடத்தான் மாட்டார்கள்! எப்படிப் பாடுவார்கள்?

33.காரைக்காலம்மையை, கண்ணப்பரை, குகனை அவனுடைய ஓடத்தில் ஏறிச் சென்ற இராமனை, அனுமனை-அவன் வாலின் பெருமையை ஆகிய இவைகளையே நாம் இன்னமும் பேசிக் கொண்டிருந்தால், எப்படித் தோன்றுவார் ஒரு கலிலியோ இங்கு?

34.புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்படமுடியாது.

35.குடி கெடுப்பவன் - கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். விபசாரி அபிஷேகம் நடத்துவிக்கிறாள். இவ்வளவையும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறார் ஆண்டவன். ஏற்றுக் கொள்ளலாமா?

36.வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை. நாம் கூப்பிட்டால் ரேடியோ மூலம் உலகமே நம் முன் வந்து நிற்கிறது. எதனால் ஏற்பட்டது இந்தத் திறமை நமக்கு? பக்தியாலா? இல்லை! பகுத்தறிவால்.

37.வாழ்வாவது மாயமாம்! இது மண்ணாவது திண்ணமாம்! இப்படியானால் மண்ணாகக்கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்களேன்! வைரக் கிரீடங்களேன்! மாணிக்க மூக்குத்திகளேன்? பரமன் ஆலயங்களிலே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்? திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல. கனவுலகக் கண்டுபிடிப்புமல்ல. காவியத்தில் உள்ள சொல். வரலாற்றில் வருகிற பெயர். ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம். அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம். இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல.

38.சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

39.மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

40.ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் கதைகளைப் புராணிகர்கள் படிக்கட்டும். வீர வாலிபர்களே! நீங்கள் உலக அறிவாளிகள், உத்தம விஞ்ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

41.ஆத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியாருக்குக்கூட நோய் கண்டபோது, ஆத்மசக்தி அல்ல; ஆறு டாக்டர்கள்தான் அவசியமாகத் தேவைப்பட்டனர் ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களைச் சிந்திக்கச் சொல்லுகிறேன்.

42.ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

43.ரேடியோவும் டெலிபோனும் ஒலிபெருக்கியும் மின்சாரமும் ஞானப்பால் உண்டதால் வந்த வல்லமைகள் அல்ல. அசரீரி அடி எடுத்துக்கொடுத்ததால் உண்டான அற்புதங்களுமல்ல. தன்னலமற்ற அறிவாளிகளின் உழைப்பால் விளைந்த உன்னதப் பொருள்கள் அவை.


---------நன்றி: "உண்மை" 1-15-செப்டம்பர் 2008