சில்வர்ஸ்டோன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையா பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் தமது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறினார். ஆனால் எனது வீடு என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியாது என்றார். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது கேட்டாலும் தர தயாராக உள்ளதாக கூறினார். மேலும் பேசிய மல்லையா, தாம் எப்போதும் இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்கயில் கடன் வாங்கி நான் நாட்டை விட்டு ஓடியதாக எப்படிக் கூறமுடியும் என வினவி இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என சாடியுள்ளார். இந்தியாவில் தற்போது தேர்தல் சீசன் களைகட்டியுள்ளதால் என்னை இந்தியா கொண்டு சென்று சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். அதற்காக தான் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன் போல என்றார்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours