புதுடில்லி : ''டில்லி அரசிடம், போலீஸ் துறைக்கான அதிகாரம் இல்லாத போது, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, அந்த அரசு உத்தரவிட முடியாது; அது குறித்த விசாரணை குழு அமைக்கவும் அதிகாரம் கிடையாது,'' என, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, துணைநிலை கவர்னர் ஆகிய இருவரில், யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், கவர்னர் தலையிட முடியாது' என கூறியது.



நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த விவகாரங்களை கையாளும் அதிகாரம், துணைநிலை கவர்னரிடம் இருப்பதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து, துணைநிலை கவர்னரின் அதிகாரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக,

ஆம் ஆத்மி தலைவர்கள் கருத்து தெரிவித்ததுடன், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' பக்கத்தில் எழுதியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தை நிர்வகிக்க தேவையான காவல் துறை நிர்வாகம், துணைநிலை கவர்னர் கையில் உள்ளது.

நிலம், சட்டம் - - ஒழுங்கு உள்ளிட்டவற்றிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலையிட முடியாது. இது குறித்து, எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கவோ, உத்தரவுகளை பிறப்பிக்கவோ முடியாது. போலீஸ் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லாத போது, குற்றச் சம்பவங்கள், ஊழல்கள் குறித்து விசாரிக்கவோ, அது குறித்த விசாரணை குழுவை அமைக்கவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடையாது. 

இதற்கு முன், அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்கள் அனைத்தும் செல்லாதவையே. 'டில்லி அரசு, மற்ற மாநில அரசுகளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது, யூனியன் பிரதேசம் என்ற வரையறைக்குள் வருகிறது; மாநிலங்களுக்கான அதிகாரம், அதற்கு கிடையாது. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்
Share To:

Post A Comment:

0 comments so far,add yours