சென்னை: டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா கொண்டு வருவதில்  திமுகவுக்கு மகிழ்ச்சி, ஆனால் இதில் டெண்டர் முறைகேடு, உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார் உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத  வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி  ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில்  அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது  என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  மசோதாவில் திருத்தமுள்ளதால் தேர்வுக்குழுவுக்கு  அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக்  ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு  முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதனையடுத்து திமுக  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக வெளிநடப்பு செய்த நிலையில் சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார்.  உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராமசாமி போட்டி:
வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராமசாமி, லோக் ஆயுக்தா மசோதா வெளிப்படையாக இல்லை என்றும்  மசோதாவை ஏற்றுகொண்டாலும் குறைகளை களைய வேண்டும் என்று தெரிவித்தார்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours