Articles by "Seithigal"
Showing posts with label Seithigal. Show all posts


தருமபுரி; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு்ள்ளது.



சில்வர்ஸ்டோன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையா பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் தமது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறினார். ஆனால் எனது வீடு என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியாது என்றார். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது கேட்டாலும் தர தயாராக உள்ளதாக கூறினார். மேலும் பேசிய மல்லையா, தாம் எப்போதும் இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்கயில் கடன் வாங்கி நான் நாட்டை விட்டு ஓடியதாக எப்படிக் கூறமுடியும் என வினவி இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என சாடியுள்ளார். இந்தியாவில் தற்போது தேர்தல் சீசன் களைகட்டியுள்ளதால் என்னை இந்தியா கொண்டு சென்று சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். அதற்காக தான் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன் போல என்றார்.






சென்னை: டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா கொண்டு வருவதில்  திமுகவுக்கு மகிழ்ச்சி, ஆனால் இதில் டெண்டர் முறைகேடு, உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார் உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத  வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி  ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில்  அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது  என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  மசோதாவில் திருத்தமுள்ளதால் தேர்வுக்குழுவுக்கு  அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக்  ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு  முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதனையடுத்து திமுக  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக வெளிநடப்பு செய்த நிலையில் சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார்.  உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராமசாமி போட்டி:
வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராமசாமி, லோக் ஆயுக்தா மசோதா வெளிப்படையாக இல்லை என்றும்  மசோதாவை ஏற்றுகொண்டாலும் குறைகளை களைய வேண்டும் என்று தெரிவித்தார்.


புதுடில்லி : ''டில்லி அரசிடம், போலீஸ் துறைக்கான அதிகாரம் இல்லாத போது, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, அந்த அரசு உத்தரவிட முடியாது; அது குறித்த விசாரணை குழு அமைக்கவும் அதிகாரம் கிடையாது,'' என, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, துணைநிலை கவர்னர் ஆகிய இருவரில், யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், கவர்னர் தலையிட முடியாது' என கூறியது.



நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த விவகாரங்களை கையாளும் அதிகாரம், துணைநிலை கவர்னரிடம் இருப்பதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து, துணைநிலை கவர்னரின் அதிகாரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக,

ஆம் ஆத்மி தலைவர்கள் கருத்து தெரிவித்ததுடன், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' பக்கத்தில் எழுதியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தை நிர்வகிக்க தேவையான காவல் துறை நிர்வாகம், துணைநிலை கவர்னர் கையில் உள்ளது.

நிலம், சட்டம் - - ஒழுங்கு உள்ளிட்டவற்றிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலையிட முடியாது. இது குறித்து, எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கவோ, உத்தரவுகளை பிறப்பிக்கவோ முடியாது. போலீஸ் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லாத போது, குற்றச் சம்பவங்கள், ஊழல்கள் குறித்து விசாரிக்கவோ, அது குறித்த விசாரணை குழுவை அமைக்கவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடையாது. 

இதற்கு முன், அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்கள் அனைத்தும் செல்லாதவையே. 'டில்லி அரசு, மற்ற மாநில அரசுகளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது, யூனியன் பிரதேசம் என்ற வரையறைக்குள் வருகிறது; மாநிலங்களுக்கான அதிகாரம், அதற்கு கிடையாது. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்
எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மறைந்த பணக்கார சாமியரான சாயிபாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில், அவருடைய பிரத்யேக அறையான யஜூர் வேத மந்திர் திறக்கப்பட்டபோது மக்கள் அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள், கிலோ கிலோவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கின. ஆனால் அந்த அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் மறக்கடிக்கச் செய்துள்ளது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். மிகப்பழமையான திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தற்போது புதிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் மீடியாக்களின் கவனம் இப்போது இந்தக் கோயிலின் மீதே குவிந்துள்ளது. வைணவர்கள் போற்றும் நூற்றியெட்டு திவ்விய தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலின் பாதாள அறைகளில் தற்போது அள்ள அள்ளத் தங்கமும், வைரமும் கொட்டுகின்றன. இது போன்ற புதையல் அதிசயங்களை இதுவரை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" போன்ற திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த நம் மக்கள் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.
அனந்தன் எனும் பாம்பின் மீது திருமால் பள்ளி கொண்டிருப்பதாலேயே திருவனந்தபுரம் எனும் பெயர் பெற்ற இந்த தலத்தில் பழம்பெரும் சேரர் குலத்தைச் சேர்ந்த சேரமான் பெருமான் எனும் மன்னன்தான் இந்தக் கோயிலை முதன்முதலாக எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துகளையும் நிர்வாகத்தையும் "எட்டு வீட்டில் பிள்ளைமார்" எனும் உயர் சாதியைச் சேர்ந்த அதிகாரம் மிக்க ஜமீன்தார்கள்தான் தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான ராஜா மார்த்தாண்ட வர்மா, இந்தப் பிள்ளைமார்களின் வம்சத்தைப் போர் மூலம் தோற்கடித்து தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் கோயிலையும் புதுப்பித்தார். கடைசியில் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய அரச பதவியை பத்மநாபசுவாமியிடம்(?) ஒப்படைத்து இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அரச பரம்பரையின் வசமே இருந்து வந்துள்ளன.
இக்கோயிலின் கணக்கில்லாத சொத்துகளை இஸ்லாமியர் உள்ளிட்ட அன்னியப் படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கோயிலில் ஆறு பாதாள அறைகளை உண்டாக்கி அவற்றில் இச்செல்வங்களை வைத்துப் பராமரித்துள்ளனர். குறிப்பாக திப்பு சுல்தானிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச பரம்பரையினர் கூறுகின்றனர். கோயிலின் மூலவரான அனந்த பத்மநாபரின் சிலையே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் (பூணுல் உட்பட) தங்கத்தால் ஆனவையே. காட்டுச் சர்க்கரை யோகம் எனும் வெளிப்பூச்சை சிலையின் மீது பூசி இஸ்லாமியரின் பார்வையிலிருந்து அது மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோயிலுக்குச் சொந்தமான இன்னும் ஏராளமான செல்வங்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு பாதாள அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் இருந்து வந்த அந்தப் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் இருப்பவற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்று டி.பி.சுந்தரராஜன் எனும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த வழக்கை எதிர்த்து மனு செய்தனர். ஆனால் அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அந்த அறைகளை ஒரு குழு அமைத்துத் திறக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூன் 27ம் தேதி தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது.
இந்தக் குழுவினரின் நடவடிக்கைப்படி கோயிலின் பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அவற்றிலிருந்த விலை மதிப்பில்லாத சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்தக் கணக்கு விபரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தங்கத்தாலான பெருமாள் சிலை, பெரும் மதிப்புள்ள வைர, வைடூரிய நகைகள், கிலோ கணக்கில் தூய தங்கத்தாலான நகைகள், தங்க நாணயங்கள் என ஒரு பெரும் புதையலே சிக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளில் கிடைத்துள்ள செல்வங்களின் மதிப்பு மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள ஆறாவது அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறை திறக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அறையைத் திறப்பது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி அதைத் தடுக்கும் முயற்சியில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்படுவதை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் அங்கு புதைந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு மேலும் சில புதிய அதிர்ச்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது. ஆறு அறைகளில் கடைசி இரண்டு அறைகள் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் குளத்திலும் பெரும் புதையல் மறைந்திருக்கலாம் என்று கேரளாவைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார். இக்கோயிலில் மொத்தம் ஒன்பது ரகசிய அறைகள் இருப்பதாகவும், தற்போது தெரியவந்துள்ள ஆறு அறைகள் தவிர, மேலும் மூன்று அறைகள் குளத்துக்குள் கிணறு வடிவில் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா ஆற்றிலிருந்து சாலகிராம் எனும் ஆயிரக்கணக்கான புனிதகற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு பத்மநாபசுவாமி அனந்த சயனத்தில் இருப்பது போன்ற போன்ற மூலவர் சிலை செய்யப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள கிணறுகளில் போடப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு நாடு ஆளாக வேண்டியிருக்கும்.
திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே திருவரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பெரும் புதையல் இருக்கலாம் என்று திருச்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திருவரங்கக் கோயிலின் சொத்துகள், பிரெஞ்சு காரர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கோயிலில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் ரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் போன்றவற்றிலும் இது போன்ற பெரும் புதையல் அன்னியர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் கிளம்பிவிட்டன. இந்தியாவின் பணக்கார சாமியான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் இது போன்ற பெரும் புதையல் மறைந்திருக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.
திருவனந்தபுரம் கோயிலில் தற்போது கிடைத்துள்ள சொத்துக்களுக்குப் போட்டியும் கிளம்பிவிட்டது. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நகைகளும் இதில் அடங்கியிருப்பதாக அந்தக் கோயில் நிர்வாகம் கூறிவருகிறது.
அன்னியப் படையெடுப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மறைத்து வைத்துக் காப்பாற்றியதற்காக மன்னர் பரம்பரையினரைப் பாராட்டும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் இவ்வளவு செல்வம் கோயிலுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். இதெல்லாம் அந்த மன்னர் பரம்பரை உழைத்துச் சேர்த்த செல்வங்களாவோ அல்லது மக்கள் பக்தியுடன் கோயிலுக்கு அளித்த நன்கொடைகளாகவோ இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றின் வெளிச்சத்துக்கு வராத மன்னராட்சிக் காலத்தில் மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆளும் வர்க்கம் சேர்த்த செல்வங்களாகத்தான் இவை இருக்க முடியும். பத்மநாப சுவாமியை அலங்கரித்த ஒவ்வொரு ஆபரணத்துக்கும் பின்னால் எத்தனை ஏழை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. இந்தியாவில் மக்களின் உழைப்பைச் சுரண்டி முறைகேடாகச் சேர்த்த பணம் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்படுவதைப் போல அந்தக் காலத்தில் சேர்க்கப்பட்ட செல்வங்கள் கோயில்களில் குவிக்கப்பட்டுள்ளன.
மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற "கருப்புச் செல்வங்களை"யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.
கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.
ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பவள விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதத்தை 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும். அதுமட்டுமின்றி நிதித்துறையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டுவர வங்கிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோரின் பட்டியலில் தமிழகம் ஏழாவது இடம் வகிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒத்துழைப்பு தரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.